“நாட்டுப் பற்று இல்லாத செயல்” - ஈரான் போரை நிறுத்தக் கோரும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் மீது ட்ரம்ப் காட்டம்
வாஷிங்டன்: ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த அர்த்தமற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனது அதிகாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான நோக்கம். இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மோசமான 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள். இத்தகைய நாட்டுப் பற்று இல்லாத செயலை யார் செய்வார்கள்? பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஜனநாயக கட்சியினர் என் மீதான வெறித்தனமான வெறுப்புணர்வால் உந்தப்பட்டுள்ளார்கள். இதில் எனக்கு வெற்றி கிடைப்பதைவிட நாடு தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புகிறார்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்த அந்த 4 உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கவனத்தை ஈர்க்கும் நாடகக்காரர்கள். தங்கள் செயலுக்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும் தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன. இந்தச் சூழலில் ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஐனநாயக கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 215 எம்பிக்களும், எதிராக 208 எம்பிக்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானத்தின் மீது செனட் அவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்பிக்கள் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு 45 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த சில எம்பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.