Select Location
All Locations
State
Region
City / District
மம்தாவுக்கு நெருக்கடி: எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோரினார் ரிதப்ரதா

மம்தாவுக்கு நெருக்கடி: எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோரினார் ரிதப்ரதா

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு 58 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை சபாநாயகர் ரதிந்திர போஸிடம் ரிதப்ரதா பானர்ஜி வழங்கினார். இதன்மூலம், மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவினார். 207 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சியை அமைத்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் மம்தா பானர்ஜிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றனர். திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் இவர்கள் இயங்கி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, திரிணமூல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொவன்தேப் சட்டோபாத்யாயை மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், எதிர் தரப்பினர் ரிதப்ரதா பானர்ஜியை முன்னிறுத்தி உள்ளனர். மொத்தமுள்ள 80 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 58 பேர், ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தை சபாநாயகர் ரதிந்திர போஸிடம் அவர்கள் இன்று (ஜூன் 3) வழங்கினர். மேலும், சாந்தீபன் சஹா, ஜாவெத் அகமது கான், சியோலி சஹா, சபினா யாஸ்மின் ஆகியோர் துணை எதிர்க்கட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொறடா பதவியும் தங்கள் அணிக்கே உரியது என்றும் அவர்கள் உரிமை கோரியுள்ளனர். அதே நேரத்தில், மம்தா பானர்ஜிதான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ரதிந்திர போஸ், பரிசீலித்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தனி அணியாக செயல்பட முடிவெடுத்தால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிக எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்திருப்பதால் சட்டப்படி அவர்களின் பதவியை பறிக்க முடியாது. மகாராஷ்டிராவில் சிவ சேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பிரிந்தபோதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் பிரிந்தபோதும் இதேபோன்ற நிகழ்வுகள் அரங்கேறின. தற்போது மேற்கு வங்கத்திலும் இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மம்தா அதிரடி: இதனிடையே, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மம்தா பானர்ஜி களமிறங்கி உள்ளார். கட்சியின் அனைத்துக் குழுக்களும், கட்சியின் துணை அமைப்புகளின் அனைத்துக் குழுக்களும் உடனடியாக கலைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தீவிர பரிசீலனைக்குப் பிறகு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் அனைத்துக் குழுக்களும், துணை அமைப்புகளின் அனைத்து குழுக்களும் கலைக்கப்படுகின்றன. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் சுயபரிசோதனை, செயல்திறன், அமைப்புசார் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்முறையை கட்சி மேற்கொள்ளும். இந்தச் செயல்முறையின் முடிவுகளின் அடிப்படையில், தாய் அமைப்பு மற்றும் துணை அமைப்புகளின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு, உரிய காலத்தில் அறிவிக்கப்படும். அமைப்பை வலுப்படுத்துவதிலும், வீரியத்துடனும் உறுதியுடனும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்துவதிலும் கட்சி தொடர்ந்து உறுதியுடன் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News