அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு
அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மூலதன ஆதாய வரி 12.5 சதவிகிதத்தையும், வட்டி வருமானத்தின் மீதான பிடித்த வரி 20 சதவிகிதத்தையும் முற்றிலும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: ”அரசுப் பத்திரச் சந்தையை ஆழப்படுத்தவும், பங்குப் பிரிவில் அதிக வெளிநாட்டு நிறுவன முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை (கடன் அல்லாத பத்திரங்கள்) மூன்றாவது திருத்த விதிகள், 2026-ஐ பொருளாதார விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.
அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) செய்யும் முதலீடுகளுக்குப் பொருந்தக்கூடிய வரி விதிப்பு முறையை முறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அத்தகைய முதலீடுகளுக்கு வட்டி மற்றும் மூலதன ஆதாயத்தின் மீதான வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரி விலக்கானது, 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது, அரசுப் பத்திரங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு செய்யப்பட்ட முதலீடுகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும்.
மேலும், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிக மற்றும் நிலையான வெளிநாட்டு முதலீட்டு வரவுகளுக்கு இது ஆதரவளிக்கும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.