தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடமானது புறநகர்ப் பகுதிகளை சென்னையுடன் இணைப்பதால் நாள்தோறும் 8 லட்சம் பயணிகள் வரை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறார்கள்.
இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை தீடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் நெரிசல்மிகு நேரத்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிட்டத்திட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார ரயில்களும் சில விரைவு ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அலுவலகத்திற்கு, செல்லக்கூடிய பெரும்பாலான பயணிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து மின்சார ரயில்களும் மிக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.