Select Location
All Locations
State
Region
City / District
பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் வெனிசுலா அதிபர் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக கிழக்கு மண்டல செயலாளர் ருத்ரேந்திர டாண்டன், “பிரதமர் நரேந்திர மோடியுடன் வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆய்வை மேற்கொண்டனர். மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை வெனிசுலா கொண்டுள்ளது. அந்த நாட்டின் எரிசக்தித்துறை ஒரு அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எரிசக்தியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு நிலையான இறக்குமதியாளராக இருக்க முடியும் என வெனிசுலா கருதுகிறது.

எரிசக்தியைத் தவிர்த்து, கால்நடை வளர்ப்பு, போக்குவரத்து, விவசாய உபகரணங்கள், ஆட்டோமொபைல் துறை, மருந்துத் துறை போன்ற பிற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. இந்த உரையாடலின்போது, பரஸ்பர நலன்சார்ந்தும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், உலகின் தென் பகுதியின் நலன்களை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்” என தெரிவித்தார்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News