Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக ஆட்சியமைத்த பின்னர், அனைத்துத் துறைகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திமுக ஆட்சிக்காலத்தில் மின்சார வாரியத்தில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், ரூ. 8 லட்சம் மதிப்பிலான மின்மாற்றிகள் அதிக விலைக்கு வாங்கியதாகவும், கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக, மின்வாரியத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும், தமிழ்நாடு மின்வாரியத் தலைமையக அலுவலகத்தில் முக்கியக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாகச் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும், சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புகளில் காகிதத்தின் அடிப்படையிலான நகல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தாலும், அனைத்து முக்கியமான மின்னணு ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 16 - 17 ஆகிய தேதிகளின் வார இறுதியில் குறைந்த ஊழியர்களே அலுவலகத்தில் இருந்த போது, இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் நிர்மல் குமார் அந்த அலுவகலத்திற்கு நேரில் சென்று தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்ட பிறகு தான் திட்டமிட்டு ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது தொடர்பாக 8 உதவிப் பொறியாளர்கள், உதவிச் செயல் பொறியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம் புகார்களை அளித்துள்ளனர்.

மின்வாரியத் தலைமையகத்தின் 4-வது, 5-வது, 7-வது மற்றும் 10-வது மாடிகளில் அமைந்துள்ள அலுவலகங்களிலிருந்து திருடப்பட்ட டிஸ்க்குகளைக் கண்டறிய ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தலைமையகத்தில் உள்ள முக்கியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் டி. ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல்துறைக் குழுவினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Source : Dinamani

1 hour ago

Home Flash News